Breaking News

இலங்கை முஸ்லிம்களின், பொருளாதார பங்களிப்பு - அஷ்ஷேய்க் றவூப் ஸெய்ன் (நளீமி)

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் இன்றைய (25.01.2020) சிந்தனைக் களப் பகுதியில் கலந்து அருமையான தகவல்களை வழங்கினார் அஷ்ஷெய்க் கலாநிதி
றஊப் ஸெய்ன் அவர்கள்.

ஆக்கத்தின் விரிவஞ்சி,
அதில் அவரால் குறிப்பிடப்பட்ட, முஸ்லிம்களின் பொருளாதாரப் பங்களிப்புப் பற்றிய  முக்கிய சில குறிப்புகளை முன்வைக்கின்றேன்.

தவளம்,மடிகே நிலம் போன்ற வியாபார முறைகளை அறிமுகம் செய்யதவர்கள் இந்நாட்டு முஸ்லிம்கள்.
தவளம் என்ற போக்குவரத்துப் பாதையே இன்று பிரதான போக்குவரத்து வழியாக மாறியுள்ளது.

இலங்கையை சர்வதேசத்துக்கு ஒரு நாடாக அறிமுகப்படுத்தியவர்கள் முஸ்லிம்களே.
18ம் நூற்றாண்டின் அரைப்பகுதியில் 02 பில்லியன் அமெரிக்க டொலர்கள் திறைசேரிக்கு முஸ்லிம்களின் வணிக மூலம் சேர்ந்தது.இன்று வரை முஸ்லிம்களின் வியாபாரம் மூலம் திறைசேரி நன்மையடைகிறது.

விவசாய தொழிற்துறையைப் பொறுத்தவரை மூன்று இடங்கள் பிரபலமானவை.
1- அம்பாறை
2- பொலனறுவை
3- அநுராதபுரம்

இதில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் விவசாயப் பங்களிப்பு மூலம் இந்த நாட்டுக்குரிய 30 வீத அரிசி கிடைக்கிறது.

முஸ்லிம்களின் உள்நாட்டு தொழிற்பேட்டைகள் மூலம் பலர் நன்மையடைகின்றனர்,குறிப்பாக எல்லாக் கம்பெனிகளிலும் பெரும்பான்மை சகோதர,சகோதரிகளே பெரும்பான்மையாக வேலை செய்கின்றனர்.

இலங்கையைச் சேர்ந்த 15 லட்சம் பேர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர், இதில் 80 வீதமானோர் மத்தியகிழக்கு நாடுகளில் வேலை செய்கின்றனர்,இவற்றில் பெரும்பான்மை சமூகத்தினரும் அதிகளவில் இருக்கின்றனர்.
இவற்றின் மூலம் நாடு வருமானம் பெறுவதுடன், மூலை முடுக்கெல்லாம் கல் வீடுகள் உட்பட நல்ல வசதிவாய்ப்புகளும் ஏற்படுகிறது.

1979- இன்று வரை அறபு,முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு நிதி உதவி செய்தும்,நீண்ட காலத் தவணை அடிப்படையில் கடன் உதவிகளும் செய்து கொண்டும் வருகின்றன.
அந்தவகையில் அண்மையில் நீண்டகால தவணைக் கடனாக,

1-சஊதி அரேபியா 7152 கோடிகளையும்
2- கட்டார் 1400 கோடிகளையும்
3- ஐக்கிய அரபு இராச்சியம் 612.5 கோடிகளையும்
வழங்கியுள்ளன.

மாக்கான் மாக்கார் பாரிய முதலீடுகளை இந்த நாட்டில் மட்டுமல்ல,வெளிநாடுகளிலும் முதலீடு செய்து, அதன் மூலம் இந்த நாட்டுக்கு அளப்பரிய வருமான மூலங்களை திறந்து கொடுத்திருக்கிறார்.

அண்மையில் கூட ஒரு முஸ்லிம், கண்டி நகரின் பிரதான இடத்தில் தனக்கு சொந்தமான காணியை அன்பளிப்புச் செய்திருக்கிறார்.

கலாநிதி பத்யுத்தீன் மஹ்மூத் 1930 ஆம் ஆண்டு, ஒரு கருத்தை முன்வைத்தார்,
அதாவது இலங்கைக்கு வந்த முஸ்லிம்கள் ஒரு நாளும் இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்று வந்ததுமில்லை,அவ்வாறு செயற்பட்டதுமில்லை அவர்கள் எப்போதும் வியாபார சமூகமாக இருந்து, இந்த நாட்டு மன்னர்களுடன் எப்போதும் விசுவாசமாகச் செயற்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்காகவே தங்களை அர்ப்பணித்துச் செயற்பட்டு வந்துள்ளனர்.

என்று பல அரிய கருத்துக்களை முன்வைத்தார் கலாநிதி
றஊப் ஸெய்ன் அவர்கள்.

அந்த கருத்தைத் தழுவியதாக இன்னும் சில கருத்துக்களையும் முன்வைக்கின்றேன்.

1974 ஆம் ஆண்டு கொடைவள்ளல் நளீம் ஹாஜியார் அவர்கள் அப்போதைய பிரதமர்
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவிடம் 1500000/- அந்நியச் செலாவணியை அன்பளிப்புச் செய்தார்கள்.அவ்வேளை நளீம் ஹாஜியார் கூறிய கருத்துக்கள் இதோ,

இந்த நாட்டு மக்களினதும்,எனது சமூகத்தினதும் நன்மையை மனதிற் கொண்டே
இந்தத் தொகையை அன்பளிப்பாக
(உள்நாட்டுப் பெறுமதி 40 லட்சம்) அரசாங்கத்திற்கு வழங்கினேன்.

இலங்கைச் சரித்திரத்திலேயே முதன் முதலாக ஒரு சாதாரண பிரஜை அரசாங்கத்திற்கு வெளிநாட்டுச் செலாவணி வழங்கிய இம்மகத்தான செயலை பிரதமர் கடுமையாகப் பாராட்டினார்.

ஆக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எப்போதும் நாட்டு நலனை முன்னிறுத்தியும், நாட்டுக்கு எப்போதும் விசுவாசமாகவும், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதிலுமே கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு பின்வரும் நூல்கள் இலக்கிய,மற்றும் தொல்பொருள் சான்றாதாரங்களாகும்.

இந்த புத்தகங்களில் குறிப்பிடப்படும் சில வரலாற்று இடங்களையே தொல்பொருள் ஆதாரமாகக் குறிப்பிட்டேன்.

1- இலங்கை முஸ்லிம்கள் தொன்மைக்கான வரலாற்றுப் பாதை
- கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி -

2- The Muslims of Sri Lanka one thousand years of ethnic harmony
900 - 1915
- கலாநிதி லோனா.தேவராஜா -

3- நளீம ஹாஜியார் வாழ்வும்,பணியும்
- கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி -

4- மத்திய கிழக்கு முதல் மட்டக்களப்பு வரை
- மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் -

5- சோனகத் தேசம்
 - ஏ.பீ.எம்.இத்ரீஸ்

   - நௌபாஸ் ஜலால்தீன் -


No comments

note