Breaking News

உடுதும்புற பள்ளியில் சிலை வைக்கப்பட்டதற்க்கு யார் மீது பொறுப்பு கூறுவது ? முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள் ?

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் உள்ள உடுகும்புற பிரதேச நூர் ஜும்மாஹ் மஸ்ஜித்துக்கு சொந்தமான காணியில் கடந்த 29.12.2019 அதிகாலை இரண்டு மணிக்கு புத்தர் சிலையொன்று இமாம் தொழுகை நடாத்துகின்ற பள்ளியின் மிஹ்ராபுக்கு பின்புறமாக வைக்கப்பட்டுள்ளது.

அது ஒரு மூன்று பாதைகள் குறுக்கிடுகின்ற முச்சந்தியாகும். அந்த இடத்தில் அவசியம் புத்தர் சிலையை வைப்பதென்றால் உத்தியோகபூர்வமாக அந்த காணிக்கு சொந்தக்காரர்களான பள்ளிவாசல் நிருவாக சபையிடம் அனுமதியை பெற்று பகல் நேரத்தில் வைத்திருக்கலாம்.

ஆனால் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட சிலை மற்றும் அதன் கூடாரங்கள் அனைத்தும் எடுத்துவரப்பட்டு யாரும் இல்லாத நல்லிரவு நேரத்தில் களவாக நிறுவியுள்ளார்கள்.

அதிகாலையில் திடீரென சிலை முளைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிருவாகத்தினர், பொலிசில் முறைப்பாடு செய்தபோது தம்மால் எதுவும் செய்ய முடியாதென்று பொலிசார் கைவிரித்தனர்.

அதன்பின்பு குறித்த பிரதேசத்தின் “நாப்பேயில்” உள்ள ஸ்ரீ சிரிலானந்த விகாரையின் விகாராதிபதியான ஹேமாலோக தேரருடனும் இரண்டு தடவைகள் விடயத்தை எடுத்துக்கூறி நியாயத்தை கோரியுள்ளார்கள்.

அதற்கு அந்த தேரர் கூறுகையில் “நாங்கள் ஒவ்வொரு முச்சந்திகளில் சிலை வைப்பது வழமையாகும். இதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை ? சிலை சிலையாக இருக்கட்டும். நீங்கள் உங்களது தொழுகையை நடாத்துங்கள். அவ்வாறு சிலையை அகற்ற கடுமையாக முயற்சித்தால் அதன்பின்பு வருகின்ற அனைத்து பிரச்சினையையும் நீங்கள்தான் எதிர்கொள்ள வேண்டிவரும்” என்று எச்சரிக்கும் தொனியில் குறிப்பிட்ட விகாராதிபதி கருத்து கூறியுள்ளார்.

சிறிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் இக்கிராமத்தில் இவ்வாறான பிரச்சினைக்கு அக்கிராம மக்களாலும், பள்ளிவாசல் நிருவாகத்தினர்களாலும் தனித்துநின்று நியாயம் கோரவோ, குரல் கொடுக்கவோ முடியாது.

கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒருமித்து குரல் கொடுத்து இப்பிரச்சினையை சர்வதேசமயப்படுத்துவதன் மூலமே எதிர்காலங்களில் வேறு இடங்களிலும் இதுபோன்று பலாத்காரமாக சிலை வைப்பதனை தடுக்க முடியும்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மாயக்கல்லியில் உள்ள அரச நிலத்தில் சிலை வைக்கப்பட்டபோது முஸ்லிம் தரப்பிலிருந்து பலர் கொதித்தெழுந்தனர். அதற்கு அன்றைய ஆட்சியாளர்கள் மீதே விரல் நீட்டப்பட்டு வசை பாடப்பட்டது.

ஆனால் இன்று பள்ளிவாசலுக்கு சொந்தமான கானியில் பலாத்காரமாக சிலை வைக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் மாயக்கல்லிக்காக அன்று குரல் கொடுத்தவர்கள் எவரும் இன்று பள்ளிவாசலில் சிலை வைக்கப்பட்டதற்காக குரல் கொடுக்க முன்வரவில்லை.

ராஜபக்ச குடும்பத்தினரை ஆட்சிக்கு கொண்டுவரும் பொருட்டு அரசியல் நோக்கத்துக்காகவே மாயக்கல்லி பிரச்சினையை முன்னிலைப்படுத்தி கடந்த அரசாங்கத்தின்மீது பழியை சுமத்தியுள்ளார்களே தவிர, இதயசுத்தியுடன் சிங்கள ஆதிக்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழவில்லை என்பது இதன்மூலம் புலனாகின்றது.

எதிர்காலங்களில் ஒவ்வொரு பள்ளிவாசலுக்கு அருகாமையிலும் புத்தர் சிலை நிறுவப்பட்டாலும் இவ்வாறானவர்கள் அது பற்றி எதுவும் பேசாது தொடர்ந்து ராஜபக்சவின் இருப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலேயே மிகவும் கவனமாக இருப்பார்கள் போல் தோன்றுகின்றது.

அதுமட்டுமல்லாது முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதனை கண்டுகொள்வதாக தெரியவில்லை.

அதிகாரத்தின்மூலம் சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினை வைத்துக்கொண்டு வீர வசனம் பேசுவது வீரமல்ல. எதிர்க்கட்சி அரசியல் எவ்வாறு செய்வதென்பது பற்றி தமிழ் அரசியல்வாதிகளிடம் முஸ்லிம் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

கடந்த ஆட்சியில் சிலை வைக்கப்பட்டதுக்கு அன்றைய ஆட்சியாளர்கள் மீது பொறுப்பு கூறப்பட்டது போன்று இன்று உடுதும்புற பள்ளிவாசல் காணியில் சிலை வைக்கப்பட்டதுக்கு இன்றைய ஆட்சியாளர்களே முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும்.

அவ்வாறு இன்றைய ஆட்சியாளர்களுக்கும் இந்த சிலைவைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்றால், தங்களது அதிகாரத்தைக்கொண்டு உடனடியாக சிலையை அகற்ற வேண்டும். அவ்வாறு செய்வார்களா ?

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments

note