Breaking News

அரசியல் தீர்மானம் என்பது சமூக வலைத்தளங்களை கையாளுகின்றவர்களின் கையில் உள்ளது- முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரிஸ் தெரிவிப்பு.

(சர்ஜுன் லாபீர்)

இந்த நாட்டில் அரசியல் அதிகாரத்தையும் அதன் தன்மையையும் தீர்மானிக்கின்ற சக்தியாக சமூக வலைத்தளங்களும் அதனை கையாளுகின்றவர்களும் காணப்படுகின்றார்கள் அவர்களின் கையில்தான் அரசியலை தீர்மானிக்கின்ற தன்மை காணப்படுகின்றது என்று முன்னாள் உள்ளூராட்சி,மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்.

முகநூல் செயற்பாட்டாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று(18)நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரிஸ் கருத்து தெரிவிக்கையில்...

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பு இன்று எமது சமூகத்தின் நிலை சம்மந்தமாக பல்வேறு விமர்சனங்கள், பல்வேறு வகையான பார்வைகள் சென்று கொண்டு இருக்கின்றன. இவ்வாறான ஒரு நிலைமை 2010,2015ம் ஆண்டுகளிலும் வரவில்லை. இருப்பினும் 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த சந்தர்ப்பத்திலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்று இருந்தார்.அந்த காலகட்டத்திலும் இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படவில்லை.

ஆனால் முதன் முதலாக 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்பு இன்று பல்வேறுபட்ட பார்வைகளும்,செயற்பாடுகளும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளன.எமது பார்வையில் தமிழ் சமூகம் 2009ம் ஆண்டு மே மாதம் பிரபாகரனுடன் அவருடைய முள்ளிவாய்க்கால் நிகழ்வின் பின்பு எவ்வாறு பலவீனப்படுத்தப்பட்டதோ அதே போன்று ஒரு நிலை எமது முஸ்லிம் சமூகத்திற்கும் ஒரு முள்ளிவாய்க்காலாக எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலின் பின்னாலுள்ள காரணங்கள் அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றேன்.

ஏனென்றால் ஒரு நாட்டின் தேசிய உயர் அங்கமாக இருக்கின்ற பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக நான் இருக்கின்றேன் அதேநேரம் தேசிய ரீதியான ஒரு கட்சியின் பிரதிப் தலைவராகவும் அரசியல் ரீதியான தந்திரோபாயங்களை கற்கின்ற மாணவன் என்ற அடிப்படையில் இந்த நாட்டில் அரசியல் ரீதியான தந்திரோபாய இராஜதந்திரங்களை கற்கின்றவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் இருப்பார்கள் நான் பெருமைக்காக சொல்லவில்லை நான் அவ்வாறான விடயங்களை கற்றுக்கொண்டு இருப்பவன்.சிலவிடயங்களை எதிர்வு கூறக்கூடிய தைரியம் எண்ணிடம் உள்ளது.நீங்கள் நினைக்ககூடாது அரசியலில் பாண்டித்தியம் பெற்ற பெரிய மேதைகளினால் அரசியலை தீர்மானிக்கின்ற காலம் இந்த காலம் இல்லை.சமூக வலைத்தளங்கள் வந்த பின்பு குறிப்பாக முகநூல் ஊடகத்தின் தாக்கத்தின் பின்பு அரசியல் தீர்மானம் என்பது இந்த சமூக வலைத்தளங்களை கையாளுகின்றவர்களின் கையில் மாறி இருக்கின்றது..

இந்தியா போன்ற பெரிய சனத்தொகை கொண்ட நாடுகளில் குறிப்பாக தற்போதைய மோடியின் ஆட்சியின் தன்மைகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களை மையப்படுத்தியே விஸ்வரூபம் கண்டுள்ளது.

மேலும் மஹிந்த தரப்பினர் ஜனாதிபதி தேர்தலில் கருத்தியல் ரீதியான கோட்பாட்டு அரசியலுக்கு தங்களை முழுமையாக உட்படுத்தி தேசிய அரசியலை காய் நகர்த்தியதனால்தான் அவர்கள் இன்று வெற்றி வாகை சூடுவதற்கு பிரதான காரணமாகும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்
ரக்கீப் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள்,சிவில் அமைப்பின் பிரதிநிதிகள்,புத்திஜீவிகள் சமூக வலைத்தள எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


No comments

note