Breaking News

மர்ஹும் ஏ.ஆர்.எம் ஜிப்ரி அவர்களின் மறைவுக்காக பாராளுமன்றத்தில் இன்று ஹரிஸ் எம்.பி அனுதாப உரை...

(சர்ஜுன் லாபீர்)

இன்று(24) பாராளுமன்றத்தில் மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் மர்ஹும் ஏ.ஆர்.எம் ஜிப்ரி அவர்களுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரிஸ் அவர்கள் அனுதாப உரை நிகழ்த்தினார்
தொடர்ந்து அவர் உரை நிகழ்த்துகையில்..

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை தொகுதியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த குறிப்பாக இந்த நாட்டின் ஊடகத்துறையில் பிரபல்யம் வாய்ந்த அறிவிப்பாளராக விளங்கிய மர்ஹும் ஏ.ஆர்.எம் ஜிப்ரி அவருடைய மறைவையிட்டு இந்த சபையில் அனுதாபத்தை தெரிவித்தவனாக அவர் பற்றி சில வார்த்தைகள் பேச விரும்புகின்றேன்.

மாமனிதர் அஷ்ரஃப்போடு முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால வளர்ச்சியில் தனது காந்தக் குரலின் மூலம் கட்சியின் மேடைகளை அலங்கரித்து கட்சியினை எழுச்சி பெறச் செய்தவர்.

தனது அறிவிப்புத் திறமை மற்றும் குரல் வளம் என்பவற்றின் மூலம் நாட்டின் எல்லாப் பாகங்களிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்ததுடன் அறிவிப்புத்துறைக்குள் வரவிருப்போருக்கு ஒரு உதாரண புருஷராகவும் காணப்பட்டார்.

குறிப்பாக அவர் பல பாடசாலைகளில் அதிபராக இருந்த அதேநேரம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலமாக ஒரு அறிவிப்பாளராக அதிலும் கல்வி நடவடிக்கைகள் சார்ந்த விடயமான அறிவுக் களஞ்சியம் என்ற நிகழ்ச்சியை நாடு பூராகவும் கொண்டு சென்று தமிழ் பேசும் மாணவர்களுக்கு பெரிதும் சேவையாற்றியவர் மர்ஹும் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஆவார்.

குறிப்பாக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை தொகுதியில் மாற்று அரசியல் கட்சியில் அவர் இருந்தாலும் என்னிடம் அவர் மிகுந்த கணவான் ரீதியில் செயற்பட்டு அம்பாறை மாவட்ட மக்களுடைய அபிவிருத்தி மற்றும் கல்வித்துறைக்காக பெரிதும் சேவையாற்றிய ஒருவர் மர்ஹும் ஏ.ஆர்.எம் ஜிப்ரி ஆவார்.

அவருடைய மறைவன்று ஜனாஸா நல்லடக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியது மக்கள் அவர் மீது வைத்துள்ள அன்பினை காணக்கூடியதாக இருந்தது.

எனவே அவரின் திடீர் மறைவினால் துயருற்று இருக்கும் அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும், இந்த நாட்டு மக்கள் சார்பிலும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்ளுகின்றேன்.

மேலும் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா அவர்களுக்கும் தனது அனுதாபத்தினை தெரிவித்தார்.

No comments

note